வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி – அன்புமணி!!

சென்னை:
வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

கர்நாடகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய சமூகநீதி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும்.

பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அம்மாநில அரசும், அதற்காக அமைக்கப்பட்ட ஆணையமும் காட்டிய வேகமும், அக்கறையும் பாராட்டத்தக்கவை.

பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என்.நாகமோகன் தாஸ் தலைமையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் நாள் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதிஅதன் அறிக்கையை தாக்கல் செய்தது.

அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 15-ஆம் நாளில் கர்நாடக அரசு அமைச்சரவையைக் கூட்டி உள் இட ஒதுக்கீடு வழங்க தீர்மானித்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதன் கடைசி நாளான, நாளை மறுநாள் ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் ஒது குறித்த சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

அதாவது கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 163 நாள்களில் அது சாத்தியமாகவுள்ளது. இது ஒரு சமூகநீதி சாதனை என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழ்நாட்டிலும் தான் ஒன்றுக்கும் உதவாத அரசும், அதனால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இருக்கிறதே….

அவற்றை நினைக்க நினைக்க கோபம் தான் கொந்தளிக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் 31.03.20222-ஆம் நாள் தீர்ப்பளித்து இன்றுடன் 1239 நாள்கள் ஆகின்றன.

அரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 952 நாள்கள் ஆகின்றன. ஆனால் அரசும், ஆணையமும் வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க எதையும் செய்யவில்லை.

சமூகநீதியை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்தவரைப் போல நாடகங்களை அரங்கேற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்வதெல்லாம் சமூகநீதியை குழிதோண்டி புதைப்பது தான்.

வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *