சென்னை:
‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமைகள் தனித்தனியாக விற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது தெரியவந்துள்ளது.
விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. இதன் தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்நிறுவனம் அஜித் பட தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதால், ‘ஜனநாயகன்’ படத்தின் உரிமை கைப்பற்றும் போட்டியில் இருந்து விலகியது.
தமிழக உரிமை விற்பனை மூலம் சுமார் 100 கோடி எதிர்பார்த்தது கே.வி.என் நிறுவனம். இறுதியாக தமிழக உரிமையினை ஏரியா வாரியாக பிரித்து விற்றுவிடலாம் என்று திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதன்படி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவினை ஏஜிஎஸ் நிறுவனம், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு உரிமையினை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கோயம்புத்தூர் உரிமையினை மன்னாரு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமையினை பிரதாப், சேலம், திருச்சி மற்றும் மதுரை ஏரியா உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கைப்பற்றி இருக்கிறார்கள்.
‘ஜனநாயகன்’ படத்தின் இந்த ஏரியா வாரியாக உரிமையினை விற்றதன் மூலம் 105 கோடிக்கு தமிழக உரிமை விற்பனையாகி இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாகும்.
105 கோடி பணத்தை எடுக்க வேண்டுமென்றால், தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சுமார் 220 கோடி வரை வசூல் செய்ய வேண்டும். இப்படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் மூலம் இந்த வசூலை எடுத்துவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள்.
டிசம்பர் 27-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இப்போதில் இருந்தே படக்குழு தொடங்கியிருக்கிறது.