சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது:
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமமான முடிவு.
- விஜய், செங்கோட்டையன் இருவரில் யார் யாருக்கு அரசியல் பாடம்
- எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
- கண்களை இமை காப்பது போல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார்.
- தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும்.
- பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. செங்கோட்டையன் சென்றதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.