தி.மு.க. அரசு முதலீட்டாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

காஞ்சிபுரம்:
அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட ‘கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும்.

ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி பொருள்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

பாரத் இன்னோவேட்டிவ் கண்ணாடி டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்பிராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.


இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.

இத்திட்டத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் நாட்டிலேயே முதன் முறையாக உயர் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டி வைத்த 17 மாதங்களில் இத்திட்டத்தின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வணிகம் புரிதலுக்கான சூழலமைப்பு சிறப்பு உள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  • திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
  • ஆயிரத்துக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.
  • எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 41 சதவீதம் பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்.
  • எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
  • செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
  • தொலைநோக்கு சிந்தனையுடன் கொள்கைகளை உருவாக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
  • முதலீட்டாளர்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை தந்து தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன் பரசன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை, கார்னிங்

நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் ஆன்ட்ரூ பெக், கரர்னிங் நிறுவனத் தின் சர்வதேச துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் கோகன் டோரான், ஆப்டிமஸ் இன் பிராகாம், நிறுவனத்தின் தலைவர் அசோக்குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சுதிர் பிள்ளை, கார்னிங் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஜோய் லீ, கார்னிங் கொரில்லா கண்ணாடி ஆசியா நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஜூம் எஸ்.கிம், பிக்டெக் நிறுவனத்தின் திட்டத் தலைவர் டாக்டர் ரவி கட்டாரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *