ரஜினிகாந்த், இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் – பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை:
இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: “75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்: “ரஜினிகாந்த் – வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்” என தெரிவித்தார்.

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் இன்று கேக் வெட்டிக் கொண்டாடினார்.

அவரது மனைவி லதா ரஜினிகாந்த், இன்று ரீரிலீஸான ‘படையப்பா’ படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துக் கொண்டாடினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *