”முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது” – கே.பாலகிருஷ்ணன்!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கேரள அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானதாகும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 27.02.2006 மற்றும் 7.5.2014 ஆகிய தேதிகளில் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இத்தீர்ப்புகளில் முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன் உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டுமானால் கேரளம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநில அரசுகளும் ஒருமித்த முடிவுக்கு பின்னரே கட்ட முடியும் என குறிப்பிட்டதோடு தமிழ்நாட்டின் மீது புதிய அணையை கேரள அரசு திணிக்க முடியாது என கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

2018ம் ஆண்டு கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்தபோது தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கை மேற்கொண்டாலும் அதற்கு உச்சநீதிமன்றத்தினுடைய அனுமதி தேவை என தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் கேரள அரசின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்டு 28.5.2024 அன்று நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பிட்டுக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானதாகும். எனவே, கேரள அரசும், மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவும் இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் தமிழகத்தின் பாசன உரிமையை பாதிக்கும் என்பதோடு இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து சட்ட ரீதியான மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *