திமுக-வை போட்டியாக நினைத்தால் தான் தங்களால் வளர முடியும் என்பதை குறிக்கோளாக வைத்து உள்ளனர்; ஆனால், ஒரு போதும் யாராலும் எந்தக் காலத்திலும் திமுக-வை வீழ்த்த முடியாது – செந்தில் பாலாஜி!!

கோவை;
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற தவெக தலைவர் விஜய், அங்கு ரேஷன் கடைகள் செயல்பாட்டில் இல்லாதது போன்று விமர்சனம் செய்து பேசி, வலைதளவாசிகளுக்கு வறுவல் பொருளாகிப் போனார்.

இந்த நிலையில், கோவையில் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற ‘என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ முன்னெடுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, எப்படிப் பேசவேண்டும் எதையெல்லாம் பேசவேண்டும் என விஜய்க்கு விளக்கமாக கிளாஸ் எடுத்தார்.

அந்த நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் விஜய்யின் ‘புதுச்சேரி ரேஷன் கடை’ விமர்சனம் குறித்து கேட்டதற்கு, ‘‘அனைத்துக் கட்சியினரும் எது குறித்து வேண்டுமானாலும் பேசலாம். சில விஷயங்களை தெரிந்து கூறலாம்.

சிலவற்றை தெரியாமலேயே யாராவது சொல்வதை வைத்துப் பேசலாம். என்னைப் பொறுத்தவரை செய்தியாளர்களிடம் ஒரு விஷயத்தைப் பேசுவதற்கு முன்னர் ஒருமுறைக்கு, இருமுறை அதை சரி பார்ப்பேன்.

முழுமையான விவரங்கள் கையில் இல்லை என்றால் அது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்துவிட்டு உங்களுக்கு தெரிவிப்பேன்.

அதன்படி அவரும் (விஜய்) ஒரு கருத்தைக் கூறியுள்ளார். அதை யாரோ அவருக்குச் சொல்லி இருப்பார்கள்.

அவரும் (விஜய்) அதை அப்படியே பேசியிருப்பார். ஆனால் பேசுவதற்கு முன்னர், அங்கு ரேஷன் கடைகள் இருக்கிறதா இல்லையா என விசாரித்துத் தெரிந்து கொண்டு பேசியிருக்கலாம்.

யாராக இருந்தாலும் ஒரு கருத்தை பேசும்போது முழுமையாக தெரிந்து கொண்டு பேசுவது நல்லதாக இருக்கும்.

அதைத்தான் மக்களும் எதிர்பார்ப்பர். ஆனால், எதுவுமே தெரியாமல் வெறுமனே வந்து, ஏ4 ஷீட்டை கையில் கொடுத்தால் அதைப் பார்த்து அப்படியே படிப்பேன் என்பது ஏற்புடையது அல்ல.

தமிழ்நாட்டில் எல்லா காலத்திலும் திமுக-வை தான் விமர்சிக்கிறார்கள்; திமுக-வை தான் போட்டியாக நினைக்கின்றனர்.

திமுக-வை போட்டியாக நினைத்தால் தான் தங்களால் வளர முடியும் என்பதை குறிக்கோளாக வைத்து உள்ளனர். ஆனால், ஒரு போதும் யாராலும் எந்தக் காலத்திலும் திமுக-வை வீழ்த்த முடியாது’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *