சென்னை;
23-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நேற்று (டிசம்பர் 19) உடன் முடிவடைந்தது. இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த விழாவினை நடத்தியது.
இந்த வருட திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி, 3 பிஎச்கே, மாமன், மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி, மருதம், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், பறந்து போ, அலங்கு, பிடிமண், காதல் உள்ளிட்ட 12 தமிழ் படங்களும் தேர்வாகி திரையிடப்பட்டன.
நேற்று விழாவின் இறுதி நிகழ்வில் சிறந்த திரைப்படம், நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமலி படத்தில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருது ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்திற்கு வழங்கப்பட்டது. 2வது சிறந்த திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமலி தேர்வானது.
சிறந்த நடிகைகான விருதை காதல் என்பது பொதுவுடைமை படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஷ் தட்டிச் சென்றார். சிறப்பு ஜூரி விருது மெட்ராஸ் மேட்னியில் நடித்த காளி வெங்கட்க்கும், வேம்பு படத்தில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமாருக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது அலங்கு படத்தில் பணியாற்றிய எஸ்.பாண்டி குமார் மற்றும் சிறந்த எடிட்டர் விருது மாயக்கூத்து படத்திற்காக நாகூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.