தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது!!

சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த, அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவும் முதல்வர் ஸ்டாலினுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இதனிடையே காங்கிரஸ் நிர்வாகியும், ராகுல்காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்துவிட்டு வந்தார்.

அதன் பிறகு ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர். சிலர் ஜனநாயகன் பொங்கல் வைக்க முற்பட்டனர்.

தொகுதிகள் எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்துக்கொண்டு வரும் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.

சில தலைவர்கள் அதிக இடம், ஆட்சியில் பங்கு எனவும் வலியுறுத்தி வந்தனர். இது திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் உள்ளிட்ட 41 தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “அனைவரிடமும் தனித்தனியே கருத்து கேட்கப்பட்டது. கூட்டணி தொடர்பாக ராகுல்காந்தி உரிய முடிவெடுப்பார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசவும், சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்டுப்படும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து நேற்று, 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரில் காந்தியின் பெயரை நீக்கி மத்திய பாஜக அரசு வேறு பெயரை வைத்தது, திட்டத்தில் உள்ள முக்கிய விதிகளை மாற்றி இருப்பதற்கு எதிராக காங்கிரஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இப்போராட்டங்களை வரும் காலங்களில் எப்படி தீவிரமாக முன்னெடுப்பது என்பது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்களுடன் ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதால், இன்று சென்னையில் நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டதாக செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.

ஆனால், செயற்குழு கூட்டம் மட்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆயத்தப் பணிகள் மற்றும் கட்சி மேலிடம் வழங்கிய அறிவுறுத்தல்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *