மத்திய அரசு தர வேண்டிய நிதியை வழங்காததால் 101 வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை – கனிமொழி எம்.பி. விளக்கம்!!

சென்னை:
கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 101 வாக்குறுதிகளை தமிழக அரசால் நிறைவேற்ற முடியாதது ஏன் என்பது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.

ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழி தலைமையிலான 12 பேர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கங்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

இக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: கடந்த தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தோம். அதில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசு ஒவ்வொரு நாளும் தமிழக அரசுக்கு இடைஞ்சல் செய்து வருகிறது.

மத்திய அரசு தர வேண்டிய நிதியை வழங்காததால் 101 வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதற்கு இடையிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக உருவாக்கி வருகிறோம்.

மத்திய அரசு, ‘ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது’ என தெரிவித்து வருகிறது. ஆனால், “முடியாததை முடித்துக்காட்டும் திமுக அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்கும்” என அமைச்சர் டிஆர்பி ராஜா இங்கு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தல் வாக்குறுதியில் மீதமுள்ள 101 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும்.

அதனை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற நம்பிக்கையில் உங்களை சந்திக்க நாங்கள் வந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவினர் ஏற்கெனவே அறிவித்த தேர்தல் அறிக்கையை மீண்டும் அறிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் திட்டம் என அறிவித்தார். இது பெண்கள் முன்னேற்றத்திற்காகக் கொண்டு வந்த திட்டம்.

ஆனால் அதிமுக குலவிளக்குத் திட்டம் என தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பெண்களை எங்கு போய் நிறுத்த உள்ளார்களோ எனத் தெரிவில்லை.

அதிமுக தற்போது அறிவித்துள்ள பெண்களுக்கு இருசக்கர வாகனத் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவித்துவிட்டு கிடப்பில் போட்டு பின்னர் பிரதமரை அழைத்து வந்து அறிமுகப்படுத்திய திட்டம். அந்த திட்டத்தை தெரியாமல் மறந்து தற்போது அறிவித்துள்ளார்கள்.

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக சார்பில் ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு குரல் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் பிரகாஷ், மதியழகன், மேயர் சத்யா தருமபுரி எம்பி மணி, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *