முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடுவது உறுதி!!

மதுரை:
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மேற்கு தொகுதியில்4-வது முறையாக போட்டியிடுவது உறுதியாகி யுள்ளது.

இதற்கு அச்சாரமாக மேற்குத் தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும் பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளார்.

அதிமுகவில் மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளார். இவர், தற்போது மேற்கு தொகுதி எம்எல்ஏ-வாக மூன்றாவது முறையாக உள்ளார்.

நான்காவது முறையாக மேற்கில் போட்டியிடுவாரா? தொகுதி மாறுவாரா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் நீடித்து வந்தது. அதற்கு ஏற்ப செல்லூர் ராஜூவும் மாநகரில் உள்ள 4 தொகுதிகளுக்கும் அதிமுக தலைமையிடம் விருப்பமனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, மேற்குத் தொகுதியைப் பற்றி உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், ‘‘மேற்குத் தொகுதி மக்கள்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தினர்.

நான்காவது முறையும் இந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன். பொதுச்செயலாளர் பழனிசாமி பார்த்து ‘சீட்’ கொடுப்பார் என்று நம்புகிறேன்’’ என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சு, மேற்குத் தொகுதியில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்ற நிலையில், தற்போது அவர்தான் மேற்கின் அதிமுக வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜூவுக்கு மேற்கு, ஆர்.பி.உதயகுமாருக்கு திருமங்கலம், வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு திருப்பரங்குன்றம் என ‘சீட்’களை உறுதி செய்து அவரவர் தொகுதிகளில் பணிகளைத் தொடங்க கட்சித் தலைமை கூறியுள்ளது. மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள்தான் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

செல்லூர் ராஜூவுக்கு இந்த முறை மேற்கில் போட்டியிட ஆர்வமே இல்லை. ஒருபுறம் அமைச்சர் பி.மூர்த்தியின் குடைச்சலும், நெருக்கடியும், மற்றொருபுறம் மூன்று முறை நின்றாகிவிட்டது, வேறு தொகுதிக்கு மாறலாம் என்ற எண்ண ஓட்டமும் அவருக்கு இருந்தது.

இதனால், இந்த முறை தெற்கு தொகுதிக்கு மாறுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், கட்சித் தலைமை அவரை மேற்கில்தான் போட்டியிட வேண்டும் எனக் கூறிவிட்டது.

இதனால் மேற்குத் தொகுதியின் பகுதிச் செயலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம், வட்டச் செயலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம், ‘பூத்’ கமிட்டி தலைவர்களுக்கு ரூ.1,000 வழங்கி தொகுதியில் தேர்தல் பணிகளைப் பார்க்கச் சொல்லி உற்சாகப்படுத்தி உள்ளார்.

அவரது கட்டுப்பாட்டில் உள்ள மற்ற 3 தொகுதிகளுக்கு பரிசு வழங்காததால் அவர் மேற்கில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார், என்றனர்.

வடக்கில் வலம் வரும் டாக்டர் சரவணன்: வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் டாக்டர் பா.சரணவன் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

அவர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்து பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தார்.

இதை ஈடுகட்டும் வகையில் கட்சித் தலைமையே அவருக்கு வடக்குத் தொகுதியை வழங்க வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதை உறுதிசெய்வது போல் டாக்டர் பா.சரவணனும், கடந்த சில மாதங்களாக வடக்கு தொகுதியில் வலம் வருகிறார்.

பொங்கல் நாளில் வடக்குத் தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களை அவர் வழங்கினார். நேற்று வடக்கு தொகுதியின் நரிமேடு பகுதியில் ஏழை மக்களுக்காக மலிவுவிலை உணவகத்தைத் தொடங்கினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *