புதுடெல்லி:
டி20 கிரிக்கெட் போட்டியில் பவர் பிளேவில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அமைத்து கொடுத்த அதிரடி பாணியையே பின்பற்றி வருகிறேன் என தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் சர்வதேச டி 20 போட்டிகளில் அறிமுகமானார்.
தனது அதிரடி மட்டை வீச்சால் அவர், தற்போது ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 34 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 2 சதங்கள், 7 அரை சதங்களுடன 1,199 ரன்களை குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 190.92 ஆக உள்ளது.
இந்நிலையில் அபிஷேக் சர்மா கூறியதாவது: ரோஹித் சர்மா நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். பவர்பிளேயில் அவர் கொடுத்த தொடக்கங்களால் எப்போதும் அழுத்தம் இருக்கும்.
நான் அணியில் சேர்ந்தபோது, பயிற்சியாளரும் கேப்டனும் என்னிடமிருந்து அதையே விரும்பினார்கள். முதல் சில பந்துகளிலிருந்தே தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வைதை நான் விரும்புவதால், அது எனது பாணிக்கும் பொருந்தும் என்று உணர்ந்தேன்.
நான் ரோஹித் சர்மாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறேன், இந்த முறையில் விளையாடி இந்தியாவுக்காக சிறப்பாகச் செயல்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் இன்னும் முழுமையாக முதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் எப்போதும் முன்னேற இடம் உண்டு.
ஆனால் முதல் ஆறு ஓவர்களில் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவதே எனது வேலை என்று நான் நினைக்கிறேன். அதற்காக நான் நிறைய பயிற்சி செய்து வருகிறேன். நான் ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தாலோ அல்லது ஆரம்பத்தில் நல்ல நோக்கத்தைக் காட்டினாலோ, அதை பின்பற்றி அணி உந்துதலை பெற முடியும். நான் எப்போதும் இதை பற்றி மட்டுமே சிந்திப்பேன்.
ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவதற்கு குறிப்பிட்ட வழியில் பயிற்சி செய்ய வேண்டும். போட்டிகளுக்கு முன்பு நான் எப்போதும் அதைத்தான் செய்வேன்.
எனக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கிடைக்கும்போது, அடுத்த தொடர் அல்லது போட்டிகளில் நான் எதிர்கொள்ளும் பந்து வீச்சாளர்களை மனதில் கொள்வேன். இவை அனைத்தும் நான் அந்தத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துகிறேன் என்பதைப் பொறுத்து அமையும்.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக பயிற்சி செய்து வருகிறேன். வெவ்வேறு அணிகளுக்கு எதிராக வெவ்வேறு சூழ்நிலைகளில் இந்தியா முழுவதும் விளையாடுவோம் என்பது எனக்குத் தெரியும், எனவே அதற்கு தயாராவது மிக முக்கியம்.
வலை பயிற்சியில் மற்ற அணிகளில் உள்ள பந்து வீச்சாளர்களை போன்று வீசக்கூடியவர்களை வீசச் சொல்வேன். மேலும் அவுட்-ஸ்விங்கர்கள், இன்-ஸ்விங்கர்களை வீசச் கூறி பேட்டிங் செய்வேன்.
மேலும் புதிய பந்துகளை பயன்படுத்தக்கூறுவேன். உலகக் கோப்பை தொடரில் எனக்கு எதிராக அதிகவேகத்தில் பந்துவீச மாட்டார்கள். கடந்த சில போட்டிகளில் நான் அதை உணர்ந்தேன். அதனால் இந்த விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன். இவ்வாறு அபிஷேக் சர்மா கூறினார்.