சென்னை:
தேர்தல் முடிவுக்கு பிறகு, தீயசக்தி, ஊழல்வாத அடிமை சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டுவிட்டோம் என உறுதியாக அறிவிப்போம் என்று தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் விஜய் பேசியதாவது: நமது இந்த அரசியல் பயணத்தில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். நான் ஏன் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன் என்றால், ஏதோ அழுத்தம் இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம். அழுத்தத்துக்கு எல்லாம் அடங்கி போகிறவனா நான்.
இந்த முகத்தை பார்த்தால் அப்படியா தெரிகிறது. நம்மகிட்ட அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. அழுத்தம் இருக்கிறதா என கேட்டால், நிச்சயம் இருக்கிறது. அழுத்தம் நமக்கில்லை, மக்களுக்கு தான். தமிழகத்தை இதற்கு முன் ஆண்டவர்கள் பாஜக-வுக்கு நேரடியாக ‘சரண்டர்’ ஆனார்கள். இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் மறைமுகமாகச் ‘சரண்டர்’ ஆகியிருக்கிறார்கள்.
அவ்வளவுதான் வித்தியாசம். தங்கள் வேஷம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கலர் கலராக வெளியிடுகிறார்கள்.
மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏமாந்துவிட்ட மக்கள், ஒரு பெரும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். நமக்காக உழைக்க ஒருவன் வரமாட்டானா? என ஏங்கும் அந்த மக்கள் இப்போது நம்மை நம்புகிறார்கள்.
மக்கள் என்னைச் சரியாக மதிப்பிட்டு, என் கேரியரின் உச்சத்தில் ஒரு இடத்தை எனக்காகக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அன்பும் உழைப்பும் இப்போது என் ‘ஒரிஜினல் கேரக்டராகவே’ மாறிவிட்டது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன்.
என் மீது ஒரு துளி ஊழல் கரை படியவும் விடமாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி இந்த இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது.
எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும், என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் சரி, யாருக்கும் அடங்கிப்போகவோ, அண்டிப் பிழைக்கவோ, அடிமையாகக் கிடக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை.
ஆண்ட கட்சி, ஆளும் கட்சிக்கு ‘பூத்’ என்பது கள்ள ஓட்டு போடும் இடம். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அது ஜனநாயகக் கூடம். அங்கு ஜனநாயகம் திருடு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இது வெறும் தேர்தல் கிடையாது. ஜனநாயக போர். தீயசக்தியின் (திமுக) தில்லுமுல்லு உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். முழித்து கொண்டிருக்கும் போதே, நம் முழியை தோண்டி எடுத்து சென்றுவிடுவார்கள்.
எனவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியார் நட்பு சக்திகளை திரட்டி பெரும் படையை உருவாக்கி ஆங்கிலேயேப் படை, ஆற்காடு படைகளை துவம்சம் செய்து தான் இழந்த சொந்த நாட்டை மீட்டார்.
இந்த தவெக படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லை என்றாலும், தனியாக நின்று வெற்றி பெறும் மிகப்பெரிய படை. தேர்தல் முடிவுக்கு பிறகு, தீயசக்தி, ஊழல்வாத அடிமை சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டுவிட்டோம் என உறுதியாக அறிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுச் செயலாளர் என்.ஆனந்த், கட்சி நிர்வாகிகள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், தாஹிரா பானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கு.ப.கிருஷ்ணன் இணைந்தார்: இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நேற்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வேளாண்துறை அமைச்சராக இருந்தார்.
அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில் இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று தவெகவில் இணைந்துள்ளார்.
விசில் அடித்த விஜய்: மேடையில் உரையாற்றி முடித்த விஜய், திடீரென ஒரு சர்ப்ரைஸாகத் தான் வைத்திருந்த ‘விசில்’ ஒன்றை எடுத்து பலமாக ஊதினார். அப்போது, விஜய், “நம்ம சின்னம்… உங்க சின்னம்… வெற்றி சின்னம்… ‘விசில்’. கப்பு முக்கியம் பிகிலு” என்று கூறினார்.
இதைக் கேட்டு, தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து, கட்சியின் அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தையும், அதன் இலச்சினையையும் முறைப்படி விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.