மக்கள் விரோதச் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் – வைகோ கண்டனம்!!

மக்கள் விரோதச் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, குற்றவியல் சட்டங்களில் மாற்றம் செய்து, மூன்று சட்டங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றி உள்ளது.

இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், மேற்குவங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

நாடு முழுக்க உள்ள வழக்கறிஞர்கள் இந்தச் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். பா.ஜ.க.வைத் தவிர்த்த பல அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்களோடு விவாதித்து, கருத்தை அறியாமல் அவர்களை அவையிலிருந்து வெளியேற்றிவிட்டு, அரசியல் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் மோடி அரசு எதேச்சதிகாரமாக உருவாகியதுதான் இந்த மூன்று சட்டங்கள்.

மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராகவும், நீதிமன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் இருப்பதோடு, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அரசியல் கட்சியினரை கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்லும் வகையிலும், ஆயுதப் பயிற்சி, ஊர்வலங்களை நடத்த அனுமதிக்கும் வகையிலும், விசாரணை நாட்களை அதிகமாக்கும் வகையிலும் ஒன்றிய அரசு இந்த மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றன. இது அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானதாகும்.

எனவே, இந்தச் மக்கள் விரோதச் சட்டங்களை ஒன்றிய மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இதனை எதிர்த்து நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு அளிப்பதோடு, மறுமலர்ச்சி தி.மு.க.வும் அத்தகைய கிளர்ச்சிகளில் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *