கிருஷ்ணகிரி:
சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்பது எங்கள் உரிமை என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் கிராமத்தில் தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற விஜய பிரபாகரன் பேசியதாவது: தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் சரிசமமாக உள்ளன.
அவற்றுக்கு இணையாக, சாதி, மதத்தை முன்னிறுத்தாத 3-வது பெரிய கட்சியாக தேமுதிக திகழ்கிறது. தேமுதிக இருக்கும் கூட்டணிதான் தேர்தலில் வெற்றிபெறும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் 500 முதல் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக, அதிமுக கட்சிகள் வெற்றி, தோல்வியை எதிர்கொண்டன.
தற்போது 170 தொகுதிகளில் போட்டியிட திமுகவும், அதிமுகவும் விரும்புகின்றன. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றது.
தற்போது எங்கள் கட்சியில் 20 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும்.
இதை திமுக, அதிமுக புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்பது எங்களது உரிமை.
கொடுப்பது திமுக, அதிமுகவின் கடமை. நாங்கள் முதல்வர் பதவியைக் கேட்கவில்லை. உங்களை முதல்வராக்கத்தான் கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.