தஞ்சாவூர்:
தேசிய அளவிலான சிறந்த மாவட்ட தேர்தல் விருது, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பெற்றுக் கொண்டார்.
ஆண்டுதோறும் ஜன. 25-ம் தேதி தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்படுகிறது. இதில், சிறந்த தேர்தல் மாவட்டங்கள், அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி, தேர்தல்களில் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துதல் பிரிவில் 2025 ஆண்டுக்கான சிறந்த மாவட்டத்துக்கான விருதுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தியது, வாக்காளர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக வீடு, வீடாகச் சென்று படிவம் வழங்கி, அதை இணையவழியில் பதிவேற்றம் செய்வதை விரைவாக மேற்கொண்டது உள்ளிட்ட பணிகளைப் பாராட்டி, தஞ்சாவூருக்கு சிறந்த மாவட்ட தேர்தல் விருது வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பெற்றுக் கொண்டார்.
விழாவில், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.