திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி; இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியாது – காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

சென்னை:
திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இதை வீழ்த்த முடியாது என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு வரலாற்றுப்போராட்டம்.

தமிழ் மண்ணுக்கும், தமிழுக்கும் ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழகம் கிளர்ந்தெழுந்துள்ளது. காஞ்சிபுரம் அதிகமாகவே போராட்டங்களைக் கண்டுள்ளது.

அதனால் மொழிப்போர் தியாகிகளுக்கு அண்ணா பிறந்த மண்ணில் வீரவணக்கம் செலுத்த வந்துள்ளேன்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடங்கி, நிர்வாக ரீதியிலான அறிவிப்புகள் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்கிறது.

இந்தியா என்பது பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட ஒரு ஒன்றியம். இங்கே ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்து, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பது ஜனநாயகப் படுகொலை.

சில நாட்களுக்கு முன்னர், சென்னை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது அவருடைய செயல்பாடு.

தமிழ்நாட்டிற்குள் இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன காரணத்துக்காக, நமக்குத்தர வேண்டிய 3 ஆயிரத்து 548 கோடி ரூபாய் நிதியைத் தராமல் இருப்பவர்தான் இந்த பிரதான்!

3 ஆயிரம், 5 ஆயிரம், ஏன் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொன்னவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து செல்ல, நாம் என்ன அடிமைகளா? தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் வளர்ந்துள்ளது.

மத்திய அரசின் புள்ளி விவரங்களே அதைத்தான் சொல்கின்றன. ஆனால் தமிழ்நாட்டை அழிக்கும் வகையில் பிரதமர் செயல்படுகிறார். தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் அந்த எண்ணம் நிறைவேறாது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டதாகப் பிரதமர் பேசியுள்ளார். நாடு முழுக்க கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக ரூ.11,311 கோடிஅளவிலான போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதில் பெரும்பாலும் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் பிடிபட்டுள்ளது. அந்த மாநிலங்களில் சென்று அவர் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் வந்து பேசுகிறார். இந்தியாவில் போதைப் பொருள் நுழைவதைத் தடுக்க வேண்டியது பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான்.

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார். புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் எனப் பெண்களுக்குப் பல சமூகப் பங்களிப்புகளைச் செய்துள்ளோம்.

அதிக மாணவிகள் தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பு படிக்கின்றனர். இந்தியாவில் அதிக பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பது தமிழ்நாட்டில்தான். ஆனால் இது எதுவும் தெரியாமல் ஆளுநர் போலவே பிரதமர் பேசியுள்ளார்.

ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவைப் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்களை விடுதலை செய்தது குஜராத் அரசு.

இவர்கள் பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசலாமா? தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் இல்லை என்று நாங்கள் தமிழ்நாட்டில் சட்டம் இயற்றியுள்ளோம்.

பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதுவரை 10 முறை தோல்வியைக் கண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

இவர்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து திமுகவை வீழ்த்தப்போவதாகக் கூறுகின்றனர். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இந்தக் கூட்டணியை வீழ்த்த முடியாது.

பொதுமக்கள், தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய நேரம் இது. தியாகிகளின் தியாகம் வீண்போகாத வகையில், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காஞ்சிபுரம் மண் எப்போதுமே திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை இந்த எழுச்சி நிரூபித்துள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர்எம்எல்ஏ, மக்களவை உறுப்பினர் செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *