திருப்பூர்:
இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்றைய தின கூட்டத்தில் ஊழல் இருக்காது, எனது ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என பேசி உள்ளார்.
லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி என்பது வெற்றுப்பேச்சு . தி.மு.க. எல்லா சாதனைகளையும் செய்து விட்டதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார்.
இது மிகப்பெரிய பொய். சாராய விற்பனை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதன்மையாக உள்ளது.
அவரின் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தொழில்கள் நம்பர் ஒன்னாக உள்ளது. நிம்மதியாக வீட்டில் உறங்குங்கள். மக்கள் உங்களை இந்த தேர்தலில் தோற்கடித்து வீட்டில் தூங்க வைப்பார்கள்.
கடந்த தேர்தலில் பெறப்பட்ட மனுக்களுக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. இந்த முறை உங்கள் கனவை நனவாக்குகிறோம் என்று சொல்கிறார்கள்.
மக்களை ஏமாற்றுவது மட்டும்தான் தி.மு.க.வின் வேலை. பிப்ரவரி 15-ந்தேதி இந்து மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும்.
அதற்காகத்தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் தி.மு.க.வில் போட்டியிட்டு தி.மு.க.வாக மாறிவிட்டார். ம.தி.மு.க.வும் தி.மு.க.விடம் ஐக்கியம் ஆகிவிட்டது. தி.மு.க. என்ற திமிங்கலம் அனைத்து கட்சிகளையும் விழுங்கி வருகிறது என்றார்.