சென்னை:
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஜன.27) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள் (ஜன.28) முதல் ஜன.30ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஜன.31, பிப்.1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜன.27) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை (ஜன.27), நாளை மறுதினம் (ஜன.28) ஆகிய இரு தினங்களும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழை, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 5 செ.மீ மழை, ஒக்கியம் தொரைப்பாக்கம், நாராயணபுரம் ஏரி, கண்ணகி நகர், வடபழனி, மணலி, திருவாரூர், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.