”கோடைக்காலத்தில் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை தேவை ” – ஜி.கே.வாசன்!!

தமிழக அரசு, நடைபெறும் கோடைக்காலத்தில் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, தற்போதைய கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டை விட இப்போதைய கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. பல இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வரண்டு காணப்படுகின்றன. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்திற்கு சென்று வரக்கூடிய நிலை உள்ளது.கோடைக்காலத்தில் மழை பெய்தால் ஓரளவுக்கு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும்.

மழை பெய்யவில்லை என்றால் தண்ணீருக்கு மக்கள் சிரமப்படக்கூடிய நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு, மாநிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும், பொது மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது ஆங்காங்கே உள்ள கிணறுகளை தூர்வாரலாம், கைப்பம்புகளை அமைக்கலாம், ஏற்கனவே தண்ணீர் வராத கைப்பம்புகளை சரிசெய்யலாம், நீர்த்தொட்டிகளை அமைக்கலாம், குடிநீர் குழாய்களைப் பராமரிக்கலாம் இப்படி தண்ணீர் கிடைப்பதற்கு உரிய பணிகளை உடனடியாக மேற்கொண்டால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும்.

தண்ணீரை சிக்கனமாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு விவசாயிகளின் ஆலோசனையை, கோரிக்கையை கேட்கலாம். எனவே தமிழக அரசு, இந்த கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *