சென்னை:
குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் கட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் ராணுவ வீரர்களுடன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, குங்ஃபூ விஜயன் தலைமையிலான சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாவட்டத் தலைவர்கள் டில்லி பாபு, கராத்தே செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்பு பழங்கினார்.
தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா பங்கேற்று, தேசிய கொடியைக் ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைமை அலுவலகத்தில், தொழிற்சங்க மாநிலத் தலைவர் மு.பன்னீர்செல்வம், தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.