இன்று முதல் தீவிர பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு!!

சென்னை:
‘விடியா ஆட்சி – உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ என்ற தலைப்பில், கழகத்தின் சார்பில் இன்று முதல் தீவிர பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்’ என ஊழலில் ஊறித் திளைத்துள்ள திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணத்தினாலும், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச் சுமையாலும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பாடுபடுகிறார்கள்.

அவர்களின் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் வகையில் இன்று முதல், திமுக ஆட்சிக்கு எதிராக, ‘ ஆட்சி – உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ என்ற தலைப்பில், பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத் வாரியாக AIADMK connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, அதிமுக ஆட்சியையும் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்யப்படும்.

இதற்காக, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் punishment bill-ஐ, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும்; அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாகவும் மேற்கொள்ளப்படும்.

நிர்வாகத் திறனற்ற இந்த திமுக ஆட்சியில், மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளை விளக்கிச் சொல்லும் இந்தப் பிரச்சார திட்டத்திற்கான முன்னெடுப்பும், அதனைத் தொடர்ந்து களப் பணிகளும் நடைபெறும்.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் இப்பணியை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக மேற்கொள்ள உள்ள இந்தப் பிரச்சாரங்களின்போது, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *