கோவில்பட்டி
கோவில்பட்டி தொகுதியை திமுக பெரும்பாலும் கூட்டணி கட்சிக்கே ஒதுக்கிவிடும். ஆனால், இம்முறை திமுக-வே களத்தில் இறங்க காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை பட்டியல் போட்டு ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்று தலைப்பிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி தொகுதி முழுவதும் மெகா போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள்.
இதைப் பார்த்துவிட்டு வெகுண்டெழுந்த திமுக-காரர்கள், ஊர், பேர் எதுவுமே போடாமல் போட்டிக்கு ஒரு போஸ்டரை அதிமுக போஸ்டருக்குப் பக்கத்திலேயே ஒட்டி இருக்கிறார்கள்.
‘டபுள் எஞ்சின் – டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது… அடிமைகளை விரட்டுவோம் தமிழ்நாட்டைக் காப்போம்’ என்ற வாசகங்கள் பளிச்சிடும் அந்த போஸ்டரில், ஒரு ரயிலில் பிரதமர் மோடி, பழனிசாமி, தினகரன், ஜி.கே.வாசன், அன்புமணி உள்ளிட்டோர் தொங்குவது போன்ற படங்களை சித்தரித்திருக்கிறார்கள்.
ஏட்டிக்குப் போட்டியாக ஒட்டினாலும் இந்த இரண்டு போஸ்டர்களுமே இப்போது கோவில்பட்டி மக்களின் பெருங்கவனத்தை ஈர்த்து வருகின்றன.