மேட்டூர்:
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று மாலை நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு 221.96 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாட்களுக்கு 330 டிஎம்சி நீர் தேவைப்படும். கடந்த ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை, கர்நாடக அணைகளில் நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் 7 முறை நிரம்பியது.
தொடர்ந்து, பாசனத் தேவையை பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வந்தது. இதனிடையே, சில நாட்களாக டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், 230 நாட்களுக்குப் பிறகு அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று மாலை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 230 நாட்களில் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 221.96 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 8.6 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது.
7 முறை உபரிநீர் வெளியேற்றம்: அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, 16 கண் மதகுகள் வழியாக 7 முறை உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 96.57 டிஎம்சி தண்ணீர் உபரிநீர் போக்கி வாயிலாக திறக்கப்பட்டுள்ளது” என்றனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று 53 கனஅடி தண்ணீர் வந்தது. அணை நீர்மட்டம் 92.91 அடியாகவும், நீர் இருப்பு 56.04 டிஎம்சியாகவும் இருந்தது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.