சென்னை:
மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்து, உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டிடம் மூடல் -நோயாளிகளை செங்கல்பட்டுக்கு அனுப்பும் அவலம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
‘செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வசதி இல்லாததால், நோயாளிகளை 30 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை உள்ளது.
55 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு வந்தது. கட்டிடத்தின் அஸ்திவாரம் பலவீனமடைந்துள்ளதால், கட்டிடம் மூடப்பட்டுள்ளது. இதனால், அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் நிலை உள்ளது.
புதிய கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி, விரைவாக கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிக்சை கட்டிடம் மூடல் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
இதை பார்த்தவுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னிடம் கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார். நானும், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமாரும் இதுகுறித்து விசாரித்தோம்.
இதையடுத்து, தேசிய நலவாழ்வுக் குழும நிதியில் இருந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்துக்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.