சென்னை:
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ள இப்படத்தை ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. பிப்.6-ல் வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
நடிகர் அபிஷந் ஜீவிந்த் பேசும்போது, “என் நன்றி அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே. நான் நடிக்கலாமா? என்ற சந்தேகம் எனக்குள் இருந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார்.
அப்போது அவர், ‘நீ நடி கண்ணா’ என்று சொன்னார். அந்த வார்த்தையிலேயே என் எல்லா தயக்கமும் உடைந்துவிட்டது.
அன்றே, ‘என்ன நடந்தாலும் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன். இயக்குநர் மதனுக்கு நன்றி. ’ டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது.
ஆனால் இந்த படம் வெளியான பிறகு, மதனுக்கு அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும். இப்படத்தில் மற்ற அனைவருமே சூப்பராக நடித்துள்ளனர்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.