சென்னை:
சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செலவில் தூர்வாரப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழக தொழில் துறையானது அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்து, பரவலான முதலீடுகளை ஈர்ப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது.
லட்சம் பேருக்கு வேலை: அந்த வகையில், சிறுசேரி சிப்காட் தகவல் நுட்ப பூங்கா வளாகமானது 782.51 ஏக்கர் பரப்பளவில் 2002-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், சுமார் ரூ.14,000 கோடி முதலீட்டையும் ஈர்த்துள்ளது.
இந்த பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் ஒரு முனைப்புடன், சிப்காட் நிறுவனம் 33.43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி புனரமைத்தும், பூங்காக்கள், புல்வெளிகளுடன் கூடிய நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகளை அமைத்தும், ரூ.30 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கியுள்ளது.
இச்சுற்றுச்சூழல் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமையப் பெற்றுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
இப்பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.