சென்னை:
“எத்தனை அடிமைகள் வந்தாலும் சரி, பழைய அடிமைகள், புதிய அடிமைகள் சேர்ந்து வந்தாலும் சரி, நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று, தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அமரப்போவது உறுதி” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் எப்படி திராவிட இயக்கத்துக்கு செல்வாக்கான ஒரு மாவட்டமோ, அதேபோல கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் செல்வாக்கான மாவட்டம்.
அப்படிப்பட்ட திராவிட இயக்கக் குடும்பமும், கம்யூனிஸ்ட் இயக்கக் குடும்பமும் இணைகிற விழாவாக, ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இந்தத் திருமணம் இங்கே நடைபெற்றிருக்கின்றது.
இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இப்படி பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால் தமிழ்நாடு இந்தியாவிலேயே, வளரும் மாநிலங்களில் 11.19 சதவீத வளர்ச்சியோடு முதல் மாநிலமாக தற்போது விளங்கி வருகின்றது.
இதையெல்லாம் பொறுக்க முடியாத மத்திய பாஜக அரசு, இன்றைக்குப் பல்வேறு வகையில் தமிழ்நாடு அரசுக்கு தொல்லைகளைக் கொடுத்து வருகிறது.
நிதி உரிமையைப் பறிப்பது, மொழி உரிமையைப் பறிப்பது, மீண்டும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் தமிழக மாணவர்கள் மீது திணிப்பது என செயல்படுகின்றனர்.
அண்மையில் அறிவித்த மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை.
பழனி மாணிக்கம் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர்.
ஆனால் இப்போதுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று பெருமையாகச் சொல்வார். ஆனால், தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கமாட்டார்.
இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு என்கிற வார்த்தையே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இப்படி மத்திய அரசு தமிழ்நாட்டைப் பல வகைகளில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைக் கொடுத்து வருகிறது. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒரு எதிர்கட்சித் தலைவர் இருக்கிறார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைப் படித்து முடிக்கும் முன்பாகவே, “மிகச் சிறந்த பட்ஜெட்” என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
முரட்டு பக்தர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கிறீர்களா? பாஜக-வுடைய ஒரு முரட்டு அடிமையாக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து இந்த பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறார்.
இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் சரி, பழைய அடிமைகள், புதிய அடிமைகள் சேர்ந்து வந்தாலும் சரி, நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று, தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அமரப் போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.