சேலம்:
“மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, தவெகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்பதுதன் மக்களின் கனவு. 100 சதவீதம் தவெக ஆட்சியமைக்கும். மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? அவ்வளவுதான் இந்த தேர்தல்” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

சேலத்தில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “நம்மை குறைத்து மதிப்பிடும்போது, ஏளனமாக பார்க்கும்போது நம்மை நிரூபித்துக் காட்ட வேண்டும் என உத்வேகம் தோன்றும். நம்மை எந்த விஷயத்தில் கேலியும், கிண்டலும் செய்கிறார்களோ, அதே விஷயத்தை வைத்து பாசிட்டிவாக மாற்றுவதில் இருந்துதான் அந்த ஆற்றல் தொடங்கும்.
உண்மையான அந்த பவரை சொல்லும் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கலாமா? ‘ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா? ஏய் விஜய் பனையூரை விட்டு வெளியே வா’ எனச் சொல்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது எனத் தெரியுமா? என்னை சீண்டிப் பார்க்க நினைத்து, கேலி கிண்டல் செய்பவர்களுக்கு நான் சொல்கிறேன்…
தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலமாக இருக்கலாம். ஆனால் என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் என் குடும்பம், என் உறவு, என் சொந்தம்.
எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த தமிழ்நாட்டுக்கு, இனி எல்லாமுமாக விஜய் நிற்பேன். தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக, முதல் பாதுகாவலனாக அவர்களின் கூடவே நிற்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன்.
உங்களுக்காக நீதி கேட்கவே நான் அரசியலுக்கு வந்தேன். ஆனால் இப்போது நான் உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். இந்த விஜய் என்ன தவறு செய்தான்? தன்னை நேசித்த மக்களுக்காக எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தது தப்பா? மற்ற கட்சிகளுக்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியும், இடமும் கொடுக்கிறார்கள். ஆனால், நமக்கு மட்டும் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மக்களை சந்திக்க எனக்கு இடம் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம்?
இந்த விஜய் உண்மையானவன். நமக்கு எதிராக சூழ்ச்சி செய்வது யார் என்பது மக்களுக்குத் தெரியும். அதர பழசான கூட்டணிக் கணக்கு, வாக்குக்கு பணம் கொடுப்பது, சாமியிடம் சத்தியம் வாங்குவது எல்லாம் இனி எடுபடாது. அவர்கள் கொடுக்கும் பணம், உங்கள் பணம். அதனை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்.
நமது ஜென்ஸீ தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புகிறேன். பணத்தை கொடுத்து ஏமாற்றினால், ஏமாறுவீர்களா? எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்குத் தான். வேறு யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் என அனைவரும் சொல்லுங்கள். இது உங்களுக்கு கேட்டுச்சா ஸ்டாலின் சார்? இனி நீங்கள் கொள்ளை அடித்து வைத்துள்ள பணம் எல்லாம், குப்பையில்தான் தூக்கி போடணும். உங்கள் ஊழல் ஆட்சியையும் மக்கள் குப்பையில்தான் தூக்கிப்போட போகிறார்கள்.
எனது குட்டி நண்பா, நண்பிகள் உங்கள் அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினரை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லுங்கள். நாங்கள் அரசியலுக்கு வந்தது யாரையும் ஒழிக்கவோ, அழிக்கவோ வரவில்லை.
யார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ, வன்மமோ கிடையாது. வெறுப்பு அரசியல் செய்ய அரசியலுக்கு வரவில்லை. அரசியல் ரீதியாக நமது எதிரி யார் என சொல்லிவிட்டு, தேர்தலில் வென்று மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்துள்ளோம்.
எங்களை ஏ டீம், பி டீம் எனச் சொல்கின்றனர். எங்களுக்கு அனுபவம் இல்லை என சொல்கிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தாண்டி பெரிய அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா?
அடுத்தவர்கள் ஆரம்பித்த கட்சியில், அடுத்தவரின் முகவரியில் அரசியல்வாதியாக இருக்கும் இவர்களுக்கு ஒரு சவால். என்னைப்போல சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்கிக் காட்ட திராணி இருக்கிறதா?
கூட்டணியை நம்பியுள்ள 75 மற்றும் 50 ஆண்டு பழமையான கட்சிகளை மீறி, களத்தில் தனியாக நின்று இன்று 30 சதவீத ஆதரவை பெற்றுள்ள எங்களுக்கு அனுபவம் இல்லையா? கட்சியை ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்தது, இவர்கள் சொன்னது எல்லாவற்றையும் மறந்ததுதான் இவர்களின் அனுபவம். கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லை.
மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தால் போதும், நல்லாட்சி கொடுக்கலாம். நல்லாட்சி கொடுக்க மெத்தப் படித்த மேதாவியாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
காமராஜர் போல, எம்ஜிஆர் போல மக்கள் சக்தியின் துணையோடு நல்ல அதிகாரிகளின் துணையோடு சிறப்பான நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும். நான் செய்து காட்டுகிறேன்.
ஆட்சியமைத்து நான்கே முக்கால் ஆண்டு ஆகிறது, இப்போது ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்கிறார் ஸ்டாலின் சார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, தவெகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்பதுதன் மக்களின் கனவு. 100 சதவீதம் தவெக ஆட்சியமைக்கும். அதில் உங்கள் கனவு நிஜமாகும்.
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என ஸ்டாலின் சார் சொல்வார். அவர் எதில் அவுட் ஆஃப் கன்ட்ரோல் என நான் சொல்லட்டுமா? சட்டம் – ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு எல்லாம் அவுட் ஆஃப் கன்ட்ரோல். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால், விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் போராடுவது ஏன்? ஆட்சியில் எல்லாமே பிரச்சினையாக உள்ளது. ஆட்சிக்கு வரும்போதுதான் பொய் பேசினீர்கள், ஆட்சியை விட்டு போகும்போதும் ஏன் பொய் பேசுகிறீர்கள்?
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு இருப்பதாக சொல்கிறார். அப்படியானால் அண்ணா பல்கலைக்கழக மாணவி, கோவை மாணவி சம்பவங்கள் எப்படி நடந்தது? சட்டம் – ஒழுங்கை பராமரிக்க தமிழகத்துக்கு ஒரு டிஜிபி வேண்டும். அவர் எங்கே போனார். ஆக்டிங் அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்தினால் ஆட்சி இப்படித்தான் சிரிப்பாய் சிரிக்கும்.
நாம் ஆட்சிக்கு வந்தால், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பேன். ஒரு தெளிவான தேர்தல் அறிக்கை விரைவில் வரும். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நான் கொடுக்கமாட்டேன். ஆட்சிக்கு வந்தப் பின்னர் மக்களுக்கு நல்லது செய்ய எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன். இப்போது திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி.
video
நான் சிலரை எதிர்ப்பதில்லை என சொல்கிறார்கள். இப்போது ஆட்சியில் உள்ள திமுகவை அகற்ற வேண்டும் என நான் சொல்கிறேன். மற்றவர்களை பற்றி ஏன் பேச வேண்டும். மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? அவ்வளவுதான் இந்த தேர்தல். இதற்கு நடுவில் வேறு யாரும் கிடையாது. விஜய்யை நம்புகிறீர்களா, ஸ்டாலினை நம்புகிறீர்களா?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை திடீரென ரத்து செய்கிறார்கள். ஒரு தேர்வை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை. இதில் உலக நாடுகளோடு போட்டி போடுவதாக சொல்கிறார். அடுத்து வரும் நம் ஆட்சியில் இதற்கு தீர்வு காண்போம்.
விக்கிரவாண்டி மாநாட்டில் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என சொன்னேன். அது எல்லா கூட்டணியிலும் வெடிக்கிறது. ஸ்டாலினும் இதனால் பதறிப்போய் உள்ளார். உங்களுடன் நான் உள்ளேன். நம்முடன் நம் மக்கள் உள்ளார்கள் இதற்கு மேல் வேறு என்ன வேண்டும். நல்லதே நடக்கும்” என்றார்.