புகழ்பெற்ற திருக்காஞ்சி தலம்!!

திருக்காஞ்சி தலம் சங்க காலம் முதலே புகழ் பெற்றுத் திகழ்ந்தது என்பதற்குச் சங்கராபரணி ஆற்றின் இருகரைகளிலும் காணப்படும் செங்கற்களே ஆதாரமாக உள்ளன.

இவை யவனர்கள் குடியிருந்த அரிக்கமேடு மற்றும் புதையுண்ட பூம்புகார் நகரில் கிடைத்த செங்கற்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் இங்கு கிடைத்த பழமையான முதுமக்கள் தாழிகளும் சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மைகளும் பெரிய கட்டிடங்களின் சிதைவுற்ற அடித்தளங்களும் இப்பகுதியின் பழமையையும் சங்க காலத் தொடர்பையும் உறுதிப்படுத்துகின்றன.

கி.பி. 6-ம் நூற்றாண்டிற்குப் பிறகு ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் இந்து சமயத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டதால் சோழ மன்னர்களின் காலத்தில் திருக்காஞ்சி தலத்திற்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.


திருக்காஞ்சி திருத்தலம் ஊழிக்கால வெள்ளத்தில் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மூலவர் அருள்பாலித்த கருவறை தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும் திருவதிகை கோவில் ஆகிய கோவில்களின் கருவறையை ஒத்திருந்துள்ளது.

நாற்புறமும் மிகப்பெரிய மதில்களால் சூழப்பட்டிருந்தது என்றும் கோவிலுக்கு அருகிலேயே பெரிய தீர்த்தக்குளம் இருந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


மேலும் தற்போது அமைந்துள்ள காமாட்சி அம்பிகையின் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முக மண்டபம் என தனிச் சந்நிதியாக அமைந்திருந்தது என்றும் இக்கோவில் “திருக்காமகோட்ட நாச்சியார் கோவில்” என்று அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.


இத்தலத்திலிருந்த ஆயிரங்கால் மண்டபமும் ஆற்று வெள்ளத்தால் சிதைக்கப்பட்டுவிட்டது. கோவிலின் புனித தீர்த்தம் முதலாம் குலோத்துங்க சோழனால் செப்பனிடப்பட்டது என்பதை இக்கோவிலின் சிதைந்த கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *