மதுரை / சிவகங்கை:
மானாமதுரையில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் இறந்தது, காவல் மரணமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆகாஷ் டெல்சனின் தந்தை ராஜேஷ்கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் சிபிசிஐடி விசாரணை, உரிய இழப்பீடு, உடற் கூறாய்வு வீடியோ பதிவு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உடற்கூறாய்வை வீடியோவில் பதிவு செய்யவும் ஆகாஷின் உறவினர் நடத்தி வரும் சாலை மறியலை கைவிடவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன் அரசு வழக்கறிஞர் ஆஜராகி, தேசிய நெடுஞ் சாலையில் நடந்துவரும் மறியல் போராட்டத்தைக் கைவிட நீதிமன்றம் உத்தரவிட்டும் போராட்டம் தொடர்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை உடனே கலைந்து செல்ல நீதிமன்றம் உத்தரவிட கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்னும் மக்களைச் சிரமப்படுத்தும் வகையில் ஏன் மறியல் போராட்டத்தை நடத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசியல் கட்சிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, இதனை வைத்து அரசியல் செய்ய நேரமில்லை. ஒருவேளை அது காவல் மரணமாக இருந்தால் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஆகாஷின் பெற்றோர் ஊடகங்கள் வாயிலாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கலைந்து செல்ல அறிவுறுத்த வேண்டும். விசாரணை நாளை தள்ளிவைக்கப்படுகிறது என்றார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இதனிடையே இந்த விவாகரம் தொடர்பாக நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா, ஆய்வாளர்கள் சரவணன், கீதா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதேபோல், மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹரிஹர சுதனும் ஆகாஷ்டெல்சனை கைது செய்த போலீஸாரிடம் விசாரணை நடத்தினார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பாதுகாக்க, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மானாமதுரை நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும் தேசிய தகவல் மைய அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை தனியாக பதிவு செய்து எடுத்துச் சென்றனர்.