சென்னை:
இஸ்ரேல், அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக, காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள், வியாபாரிகள், ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்டவை தெரிவித்த கருத்துகள்:
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்: தற்போது வரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு இல்லை. போதிய சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன.
அதேபோல், சென்னையில் எல்பிஜி மூலம் இயங்கும் மின் மயானங்களில் காஸ் தட்டுப்பாடு இதுவரை இல்லை. வரும் நாட்களில் பிரச்சினை எழாதபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா: தற்போது ஓட்டல்களுக்கு தேவையான சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 தினங்கள் இந்த தட்டுப்பாடு தீவிரமடையலாம்.
ஓட்டல்களில் தினசரி தேவைக்கேற்ப சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன. அவற்றை சேமித்து வைக்கத் தனியாக கிடங்குகள் எதுவும் இல்லை என்பதால், பதுக்கல் செய்ய முடியாது.
ஒருநாள் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றாலும் உணவகங்களை நடத்த முடியாத சூழல் ஏற்படும். இது மக்களுக்கான உணவு விநியோகத்தைப் பாதிப்பதோடு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.
இந்தச் சிக்கலை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களை அத்தியாவசியச்சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம், சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போதைக்கு உணவகங்களில் தற்காலிக விலை ஏற்றம் எதுவும் இல்லை.
சென்னை ஓட்டல் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார்: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உணவகங்களை எஸ்மா சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அத்தியாவசியத் தேவையாக கருதி தடையற்ற சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய முடியும்.
வழக்கமாக முன்பதிவு செய்த அன்றே சிலிண்டர் கிடைக்கும். ஆனால், தற்போது 2 முதல் 3 நாட்கள் வரை தாமதமாவதால், கையிருப்பில் உள்ள சிலிண்டர்களைக் கொண்டு இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே உணவகங்களை இயக்க முடியும்.
தென்மண்டல எல்பிஜி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன்: போர் காரணமாக வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் மூலமாக வரும் காஸ் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 100 முதல் 120 லாரிகள் இயக்கப்படும் நிலையில், தற்போது அதில் 20 சதவீதம் குறைந்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் காஸ் தற்போது வரை பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட உள்ளதால், அதிலிருந்து சீரான உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) செயல் தலைவர் பாலசுப்ரமணியம்:
ஆட்டோக்களில் பெட்ரோலில் இருந்து எரிவாயுக்கு மாற்றப்படும் போது அதில் பல சிக்கல்கள் இருந்ததை அரசிடம் வலியுறுத்தினோம். ஆட்டோ ஓட்டுநர்களை பொறுத்தவரை ஏற்கனவே காஸ் நிரப்ப அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.
தற்போது தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அரை நாள் வரை கூட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கம் பொதுச்செயலாளர் சுந்தரம்: சென்னையில் சுமார் 10 ஆயிரம் டீக்கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, டீக்கடைகளை மூடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று வரை கள்ளச்சந்தையில் கூட ஓரளவு விலை உயர்த்தப்பட்டாலும் சிலிண்டர்கள் கிடைத்தன. ஆனால், இன்றைக்கு காஸ் விநியோகம் சுத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாச ராஜா: வீடுகள், மருத்துவமனைகள்,கல்லூரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், உணவகங்களுக்கான விநியோகம் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மின் அடுப்புகளைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே தற்போது தப்பித்து வருகின்றனர்.
தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி: போர் காரணமாக தற்போது காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா என்பதை தற்போதைக்கு கூற முடியாது.ஒருவாரம் கழித்து தான் நிலைமை என்ன என்பது தெரியவரும்.
ராம் பரணி, ஐடி ஊழியர்: முன்பு சிலிண்டர் புக் செய்தால் 3 நாட்களில் வீட்டுக்கு வந்துவிடும். ஆனால், இப்போது 10 நாளாகியும் கிடைப்பதில்லை. ஏஜென்சிக்கு போன் செய்து கேட்டால், ‘லோடு வரல, வந்ததும் தரோம்’னு ஒத்த வரியில பதிலைச் சொல்கின்றனர். திடீரென சிலிண்டர் தீர்ந்துவிட்டது. பேக்கப் சிலிண்டரும் இல்லை.
ஜி.கே.முரளிதரன், தனியார் நிறுவன ஊழியர்: காஸ் ஏஜென்சிகளில் ஸ்டாக் இல்லை என போர்டு மாட்டி வைத்திருக்கிறார்கள்.
ஓட்டலில் வாங்கி சாப்பிடலாம் என்றாலும் அங்கும் காஸ் தட்டுப்பாடு காரணமாக உணவு சரியாக கிடைக்கவில்லை. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்.சிவகிருஷ்ணன், எல்ஐசி முகவர், பல்லாவரம்: காஸ் அடுப்பிலேயே சமைத்து பழகிவிட்டோம். அவசர தேவைக்காக உடனே விறகு அடுப்புக்கு மாற இயலாது. ஓட்டல்களிலும் காபி, டீ மற்றும் உணவு பொருட்களின் விலை உயரும். நினைத்தாலே சற்று அச்சமாகதான் இருக்கிறது.
எஸ்.வாசுகி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை, முகப்பேறு: தட்டுப்பாடு வந்தால் சிலிண்டர் விலை அதிகரிக்கும்.
காஸ் பிரச்சினையை எதிர்கொள்ள நாமும் உடனே மாற்று வழிமுறைக்கு மாறிக்கொள்ள வேண்டியதுதான்.
ஒரே நேரத்தில் தேவையானதை சமைத்து ஹாட் பாக்ஸில் வைத்துக் கொள்ளலாம். மின்சார ஸ்டவ் வாங்கி பயன்படுத்தலாம்.
ஸ்வீட்லின் பிரபாகரன், குடும்பத்தலைவி, திருமங்கலம்: தொலைக்காட்சிகளில் காஸ் தட்டுப்பாடு என்ற செய்திகள் வந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது சற்று கலக்கமாகதான் இருக்கிறது. காஸ் இல்லாவிட்டால் விறகு அடுப்புக்கு மாறிவிடவும் முடியாது.
உடனடி தேவைக்காக இண்டக்சன் ஸ்ட்வ் பயன்படுத்தலாம். அடித்தட்டு மக்கள் தெருவில் அடுப்பு வைத்து சமைத்துக் கொள்வார்கள். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதுபோன்றும் செய்ய முடியாது.
வாழை இலை வியாபாரி சங்கரேஸ்வரன்: சிலிண்டர் தட்டுப்பாட்டால் தி.நகரில் மட்டும் பல்வேறு கடைகளில் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தினசரி தி.நகரில் மட்டும் 5000 வாழை இலைகள் ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் நேற்று வெறும் 1,500 இலைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. ஹோட்டலை சார்ந்த மற்ற தொழில்களும் பாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஐடி ஊழியர்கள் விடுதி மற்றும் பீஜி உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி வழங்கப்படாது.
அதேபோல் சப்பாத்தி, தோசையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்கள் வழங்கப்படும்.
குருமா, சாம்பாருக்கு பதிலாக சட்னி வழங்கப்படும். வாரத்தில் இரு நாட்கள் அப்பளம் அல்லது முட்டை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உணவு வகைகளே பின்பற்றப்படும்” என்று தெரிவித்தனர்.