ஒரு தொகுதியில் மட்டும் மதிமுக தனி சின்னத்தில் போட்டி!!

சென்னை:
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.

இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் நேற்று கையெழுத்திட்டனர்.

அதன்படி மதிமுகவுக்கு மொத்தம் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3-ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்திலும் மதிமுக களமிறங்குகிறது.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘‘உடன்பாடு கையெழுத்தாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் பதிவை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவரிடம், நான் எப்படி உங்களுக்கு உறுதுணையாக இருந்தேனோ, அதுபோல முதல்வர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறினேன்.

திமுகவுக்கு உறுதுணையாக இருப்பது, எப்படியாவது மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என நினைப்பதை தடுப்பது ஆகும். அந்த வகையில் திமுகவுக்கு அரணாக இருக்கும் வகையில் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது மகிழ்ச்சி.

பிரதமர் மோடி 2029ம் ஆண்டில் அந்த பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்’’ என்றார்.

முன்னதாக மதிமுகவின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று காலை நடந்தது. செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, ‘‘திமுக கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை.

திமுக கூட்டணி வலுவான கூட்டணி. பொதுவான நோக்கமான பாஜக தமிழகத்தில் நுழையக் கூடாது என்ற அடிப்படையில் இணைந்துள்ளோம். அதற்காகத் தொகுதிகளை விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *