மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மேல்முறையீடு மனு தாக்கல்!!

சென்னை:
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாமக.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணி முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யவும், அந்தக் கடிதத்தை தனக்கு அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டியதுடன், உள்கட்சி பிரச்சினை தீரும்வரை தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும், உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் கூறியது.

மேலும், இதுபோன்ற வழக்கை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்து கடந்த பிப்.20-ம் தேதி தள்ளுபடி செய்தது.

ஏற்கெனவே மாம்பழம் சின்னம், பாமக பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்த வழக்கு விசாரணைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தச் சூழலில், அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *