மும்பை:
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. சஞ்சு சாம்சனின் வருகை சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் 44 வயதான தோனி அனைத்து ஆட்டங்களிலும் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனின் வருகையால் இம்முறை தோனி இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இஃர்பான் பதான் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் கூறியதாவது:
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனின் வருகை, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது ஆட்டத்தை இன்னும் சுதந்திரமாக வெளிப்படுத்த உதவும். ஒரு கேப்டனாக ருதுராஜ் வளர்ந்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.
எம்.எஸ்.தோனி உருவாக்கி உள்ள மாபெரும் பாரம்பரியத்தை சுமந்துகொண்டு, ஐபிஎல் போன்ற தொடரில் ஓர் அணியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஒரு வீரரின் வாழ்க்கையில் அது மிகப்பெரிய சவால்களில் ஒன்று. ஆனால் தோனியின் ஆதரவும், சஞ்சு சாம்சன் அளிக்கும் உதவியும் ருதுராஜுக்கு பலன் தரும்.
அணியின் வீரர்களைப் பார்ப்பதும், விளையாடும் லெவனை கற்பனை செய்து பார்ப்பதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். அனுபவம் வாய்ந்த வீரர்களை நம்புவதே கடந்த காலங்களில் சிஎஸ்கே-வின் வெற்றிக்கான தாரக மந்திரமாக இருந்தது.
ஆனால் இப்போது, அவர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றி, அனுபவம் குறைந்த இளம் வீரர்களை நோக்கிச் செல்கிறார்கள்.
அவர்கள் எதிர்காலத்துக்காகவும் அணியை உருவாக்கி வருகிறார்கள். டெவால்ட் பிரேவிஸ், ஊர்வில் படேல், ஷிவம் துபே மற்றும் சர்ஃபராஸ் கான் போன்ற உற்சாகமளிக்கும் வீரர்கள் அணியில் உள்ளனர்.
இந்த சீசனில் அவர்கள் தங்கள் ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.
தோனி இல்லாமல் சிஎஸ்கே முழுமையடையாது. மஞ்சள் நிற உடையில் நாம் அவரைப் பார்க்கும் கடைசி சீசனாக இது இருக்கலாம்.
தோனி இல்லாத சிஎஸ்கே-வையும் ஐபிஎல் தொடரையும் கற்பனை செய்து பார்ப்பது மிகவும் கடினம். இந்த சீசனில், அனைவரையும் ஒன்றிணைப்பதில் தோனி ஒரு முக்கியப் பங்காற்றுவார்.
அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஓய்வறையில் அவர் இருப்பது வீரர்களுக்குப் பெரிதும் உதவும். சஞ்சு சாம்சனும் இதன் மூலம் பயனடைவார், ஏனெனில் அவரும் தலைமைத்துவக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்.
ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டன். ஆனால் ஒரு குழுவாக எப்போதும் இரண்டு அல்லது மூன்று பேர் எதிர்காலத்துக்காகத் தயார் செய்யப்படுகிறார்கள்.
அந்த இடத்தில்தான் தோனியின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவர், ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்.
தோனியின் உடற்தகுதி, பேட்டிங் வரிசை மற்றும் அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவாரா என்பது குறித்த கேள்விகள் எழக்கூடும்.
சிஎஸ்கே அணி நிர்வாகம் இதை ஒவ்வொரு கட்டமாகவே அணுகும். 6-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வதன் மூலம், அவருக்கு ஒரு மிகச்சிறந்த விடைபெறுதலை வழங்க அவர்கள் நிச்சயமாக முயற்சிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.