அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள்!!அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை…

சென்னை:
“அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை சொல்லி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 2 மணி நேரம் காத்திருந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை அதிமுக எனில் அந்த கட்சியின் அலுவலகத்தில் தானே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும்.

ஆனால், அமித் ஷா வீட்டில் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியின் அலுவலகத்தில் இதுவரை ஒருமுறைகூட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதற்குகூட திராணி இல்லாமலா இருக்கிறது அதிமுக?

அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள் பழனிசாமி. அதிமுக-வுக்கு கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவதற்காக பழனிசாமி, இன்னொரு கட்சி தலைவர் வீட்டில் காத்துக் கிடப்பது காலக்கொடுமை.

கூட்டணி தொடர்பாக அமித் ஷாவிடம் பேசுவதற்காக இதுவரை ஒன்பது முறை பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அமித் ஷாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் அதிமுக, அண்ணா அதிமுகவா இல்லை அமித் ஷா அதிமுகவா?

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையும் சிபிஐ-யும் சம்மன் அனுப்புவது போல, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அமித் ஷா, பழனிசாமியை அழைத்திருக்கிறார்.

அதிமுக-வும் பாஜக-வும் பரஸ்பரம் சம்மதித்து உருவான கூட்டணியா இல்லை சம்மன் கூட்டணியா? தொகுதிப் பங்கீட்டைக்கூட அமித் ஷாவிடம் கேட்டுச் செய்வதற்கு பதிலாக ‘பாஜக-வின் கிளைக் கழகம்தான் அதிமுக’ எனக் கட்சியின் விதியை பழனிசாமி திருத்திவிடலாம்.

கட்சியையே டெல்லியில் அடமானம் வைக்கத் துணிந்த பழனிசாமி, ஆட்சியில் இருந்த போது தமிழகத்தின் உரிமைகளை பாஜக-வுக்கு காவு கொடுத்த பழனிசாமி, இப்போது அதிமுக தொண்டர்களையும் முழுமையாக அடகு வைத்துவிட்டார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என பழனிசாமி புலம்பினாலும் அமித் ஷாவும், மோடியும் அதை பொருட்படுத்தவே இல்லை.

மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி கூட்டங்களில் பிரதமர் மோடி, பழனிசாமியின் பெயரை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை. டிடிவி.தினகரன் கூட பழனிசாமியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

அடிமைத்தனத்தில் ஊறிப் போயிருக்கும் பழனிசாமியை இந்தத் தேர்தலோடு தமிழக மக்கள் அரசியலை விட்டே அப்புறப்படுத்தப் போவது உறுதி.

இந்த அடிமைகளை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நுழைந்துவிடலாம் என கற்பனைக் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் பித்தலாட்ட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டித்தான், இந்த தேர்தல், தமிழகம் வெர்சஸ் டெல்லி என சூளுரைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *