பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஊர்வலமாக வந்த தவெக தலைவர் விஜய் – பெரம்பூரில் பிரச்சாரம்!!

சென்னை:
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஊர்வலமாக வந்த தவெக தலைவர் விஜய், ‘இந்தத் தேர்தலோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடைப்பெறப் போகிறார் ’ என்று ஆவேசமாகப் பேசினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், பாமக சார்பில் ம.திலகபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து ஊர்வலமாக வந்த அவர் பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், “நம்மைப் பிடித்தவர்கள் உள்ள இடத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என நினைத்தேன். தமிழகமே எனக்குப் பிடித்த இடம்தான்.

அதனால், தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரத்தைத் தொடங்கலாம். ஆனால் நம் வீட்டின் வாசலில் இருந்து, நம் தாய் வீட்டிலிருந்து தொடங்குவது போல், பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தேன், அதனால் இங்கு பெரம்பூரில் இருந்து தொடங்குகிறேன்.

வட சென்னையின் அடையாளங்களான லூர்து அன்னை தேவாலயம், பிரசித்தி பெற்ற கோயில், பல மசூதிகள் இருக்கும் இந்த் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்.

‘உன்னை மதிக்கும் உழைக்கும் மக்கள் உள்ள தொகுதியிலிருந்து இருந்து பிரச்சாரத்தை தொடங்கு’ என எனது மனம் சொன்னதால் இங்கிருந்தே தொடங்குகிறேன்.

என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் மக்களே, போதைப் பொருள் புழக்கம் மிகுந்த, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, ஊழல் மிகுந்த தமிழகத்துக்கு ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சிதான் காரணம். இப்படிப்பட்ட ஆட்சி நடத்திய ஸ்டாலின் இத்தேர்தலோடு விடைபெறப் போகிறார்.

நம் வீட்டுப் பெண் பிள்ளைகள், இரவில் கழிவறை செல்லக் கூட முடியவில்லை, மூதாட்டியைக் கூட விட்டுவைப்பதில்லை. டீக்கடையில் டீ குடிக்கச் சென்றால் கூட போதை ஆசாமிகள் வெட்டு, குத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?, இங்கு மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?, ( விஜய்யின் கேள்விக்கு இல்லை என தவெகவின ஆர்ப்பரித்தனர்). ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் பாதுகாப்பு மீது அக்கறையில்லை. தன் குடும்பத்தின் சொத்தைப் பெருக்குவதிலேயேதான் அக்கறை. நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்பில் நடந்துள்ள ஊழல் இளைஞர்கள் மீதான அநீதி.

மக்களுக்குப் பாதுகாப்பு தர இயலாத, மக்கள் மீது அக்கறையில்லாத இந்த திமுக ஆட்சியைத் தூக்கி எறிவோம்.

அதனால், கொள்ளையடித்தப் பணத்திலிருந்து அவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அதை, வாங்கிக் கொண்டு பதிலுக்கு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள்.

உங்கள் மகன், அண்ணன், தம்பி, பிள்ளை என நினைத்து எனக்கு வாக்களியுங்கள். எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள், வாய்ப்பு கொடுங்கள்.

ஏப்ரல் 23-ம் தேதியன்று மறவாமல் வாக்களியுங்கள். ஜென் ஸீ இளைஞர்களே வாக்களிக்கத் தவறிவிடாதீர்கள். தேர்தல் நாளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு எதிரான பொத்தானை அழுத்தத் தவறாதீர்கள்.

நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும்.” என்று விஜய் பிரச்சாரத்தில் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *