திருப்பரங்குன்றம்;
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் விளக்கு ஏற்ற விடாமல் தடுத்த திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி வழங்கியுள்ளது.
ஆனால், மத்திய அரசு நிதி தருவதில்லை என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.
வரி வருவாயில் இருந்து தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
அதையும் தாண்டி ரூ.10 லட்சம் கோடியை தமிழக அரசு கடன் வாங்கி உள்ளது.
இதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை செய்யாமல், ஊழல் செய்து கஜானாவை நிரப்பி வருகிறது.
எனவே, நிதியை வைத்து என்ன செய்தீர்கள் என்று திமுகவினரிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு வாங்காமல், வாக்கு வங்கிக்காக மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கில் ஈடுபடுகிறது.
கலாச்சாரம், பண்பாடு என்பது ஆன்மிகத்துடன் தொடர்புடையது. சனாதனம் உயிர்மூச்சாக உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் விளக்கு ஏற்ற விடாமல் தடுத்த திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
சனாதன தர்மத்தை இழிவாக பேசிய உதயநிதிக்கு தண்டனை கொடுக்கும் நேரம்தான் இது.
குடும்ப ஆட்சி நடத்தி கொள்ளை அடிக்கும் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைய வாய்ப்பு கொடுங்கள்.
தமிழகம், தமிழக மக்கள், தமிழ் மொழி மீதும் மிகப்பெரிய ஈடுபாட்டையும் அன்பையும் மோடி கொண்டுள்ளதால், உலகம் முழுவதும் தமிழ்மொழியை கற்கும் வாய்ப்பை பிரதமர் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
இதனால், 20 லட்சம் தமிழர்கள் வசிக்கக்கூடிய அமெரிக்காவில் இருந்து தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.