வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 21-ந்தேதி பிரம்மோற்சவம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21-ந்தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவம் தொடங்குகிறது.


சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதும் திருப்புகழ் பாடப்பெற்றதுமாகிய இக்கோவில் கல்யாண பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. இங்கு 6 வாரங்கள் வந்து வேண்டிக் கொண்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

மேலும் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாகவும், திருப்பணி கும்பாபிஷேகம் காரணமாகவும் 7 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம் வரும் 21-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு 20-ந் தேதி காலை கிராம தேவதை உற்சவம், அன்று மாலை விநாயகர் உற்சவம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து 21 ந்தேதி காலை கொடியேற்றம் முடிந்து சவுடால் உற்சவம், மாலையில் வெள்ளிமயில் வாகனம், 22-ந் தேதி காலையில் சூரியபிரபையும் மாலையில் சந்திரபிரபையும், 23-ந் தேதி காலையில் கேடய உற்சவம் மாலையில் ஆட்டுக்கிடா வாகனமும், 24 -ந்தேதி காலை கேடயம் மாலையில் கேடயம், 25 -ந்தேதி காலை கேடயம் மாலையில் அன்னவாகன உற்சவமும் நடைபெற உள்ளது.

26-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனமும் மாலையில் கேடய உற்சவமும், 27-ந்தேதி காலையில் உள்புறப்பாடு ரதமும் மாலையில் மகா அபிஷேகம், 28ந் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு மாலையில் குதிரை வாகனமும், 29-ந்தேதி காலை தல விருட்ச வாகனமும் மாலையில் கல்யாண உற்சவம் இதனைத் தொடர்ந்து பெரிய மயில் வாகன உற்சவமும், 30-ந்தேதி காலை சிறிய மயில் வாகனம் தீர்த்தவாரியும் மாலையில் புஷ்ப பல்லக்கு முடிந்து கொடியிறக்கமும் 31- ந்தேதி காலை சண்டிகேசர் வெள்ளி இடப வாகனம் மாலையில் விடையாற்றி உற்சமும் நடைபெற உள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற் சவம் நடைபெற உள்ளதால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

உற்சவ நாட்களில் நாள்தோறும் கோவில் மயில் மண்டபத்தில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *