சென்னை:
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்யை முன்னிறுத்தி காங்கிரஸ் ஆடும் அரசியல் ஆட்டம், தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களைப் பிடித்தது. ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த அக்கட்சிக்கு கை கொடுத்தது காங்கிரஸ்.
இதற்கு, “தமிழகத்தில் பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்கிறது காங்கிரஸ்.
ஆனால், “இரண்டு அமைச்சரவை இடங்களுக்கு ஆசைப்பட்டு முதுகில் குத்திவிட்டது” என திமுகவினர் கொதிக்கிறார்கள். இதனால் தேசிய அளவில் ‘இண்டியா’ கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, நாடாளுமன்ற மக்களவையில் தங்களது எம்.பி.க்களின் அமரும் இடத்தை மாற்றி அமைக்கக் கோரி திமுக தரப்பில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம் எழுதினார்.
அதேநேரத்தில் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகளும் காங்கிரஸும் எதிரெதிராக மோதிக்கொண்டாலும், தேசிய அளவில் கூட்டணியில் நீடிப்பதைப்போல தமிழகத்திலும் தொடரலாம் என காங்கிரஸ் கணக்கு போட்டது.
ஆனால், நாடாளுமன்றத்தில் கூட காங்கிரஸுடன் ஒட்டி அமர திமுக விரும்பவில்லை.
சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் திமுக எம்பி கனிமொழி, “மாறிவரும் அரசியல் சூழல்களின் காரணமாகவும், காங்கிரஸுடனான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாலும், அவையில் அவர்களுக்கு அருகில் அமர்வது உசிதமல்ல.
திமுக உறுப்பினர்கள் தங்களது கடமைகளை சரியாகச் செய்ய ஏதுவாக தனி அமரும் வசதி செய்து தரப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் ‘இண்டியா’ கூட்டணியை மீண்டும் பலப்படுத்த முயலும் வேளையில், இந்த விரிசல் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை சந்தித்ததுடன், ஸ்டாலின் மற்றும் மம்தாவுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, “கடினமான காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது காங்கிரஸுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள், “பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் முரண்படுகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா, ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா, ஜார்கண்ட் ஹேமந்த் சோரன், டெல்லி அரவிந்த் கேஜ்ரிவால், உபியில் அகிலேஷ் யாதவுடன் என காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடிக்கிறது.
இப்போது திமுகவுடனும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் இல்லாத ஒரு மூன்றாவது அணியை உருவாக்க மற்ற எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
முன்பெல்லாம் இண்டியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பை மாநிலக் கட்சிகளின் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக நிற்கும். தற்போது அதுவும் இல்லாமல் ஆகிவிட்டது” என்றனர்.
இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், “தமிழகத்தில் மதவாத சக்திகள் கால் பதிப்பதைத் தடுப்பதற்காகவே இந்த கருத்தியல் மாற்றம் என வெளியில் சொன்னாலும், உண்மையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் நீண்ட நாட்களாகவே சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.
திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தர திமுக மறுப்பதாகவும் காங்கிரஸின் அடிமட்டத் தொண்டர்கள் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இதன் விளைவே இந்த விலகல். மேலும் தமிழக அரசியலின் எதிர்காலம் இனி விஜய் தான் என்பதை உணர்ந்தே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது” என்றனர்.
இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் ஆகிய இரு வேறு கொள்கைகள் மட்டுமே பிரதானமாக உள்ளன. மற்ற கட்சிகளால் இவற்றுக்கு முன்னால் நிற்க முடியாது.
இறுதியில் காங்கிரஸ்தான் பாசிச சக்திகளை வீழ்த்தும்” என மற்ற கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடங்கியுள்ள இந்த ‘விஜய்-காங்கிரஸ்’ புதிய அரசியல் அத்தியாயம், தேசிய அரசியலின் சதுரங்க ஆட்டத்தையே மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.