குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிரந்தரமான தீர்வுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!! தவெக அரசு மீது பிரேமலதா விமர்சனம்…..

சென்னை:
“தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிரந்தரமான தீர்வுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

சென்னையில் 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவரே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது மூதாட்டி ஒருவர் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வயது முதிர்ந்த பெண்கள்கூட பாதுகாப்பாக வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி, 62 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மனிதநேயத்தை தலைகுனியச் செய்துள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடைபெற்ற திருமண வீட்டில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டிய சம்பவம் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் 30 வயது இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது தமிழக மக்களிடையே மிகுந்த வேதனையையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளது.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை உறுதி செய்வது அரசின் முதன்மை பொறுப்பாகும்.

எனவே, தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக மேலும் கடுமையான மற்றும் விரைவான தண்டனை நடைமுறைகளை கொண்டு வர வேண்டும்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அரசுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது மக்களிடையே ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

தமிழக முதல்வர் நேரடியாக இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி, சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிரந்தரமான தீர்வுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவங்களைப் பார்க்கும்போது, ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற பழமொழிக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்துள்ளது மிகவும் வேதனைக்குரியதும், தலைகுனிவானது” என்று அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *