எங்கள் தலைவா தலைமை ஏற்க வா…!” என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டரால் பரபரப்பு!!

கோவை:
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை யின் பிறந்தநாளை முன்னிட்டு, “எங்கள் தலைவா தலைமை ஏற்க வா…!”

என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை யின் பிறந்தநாள் வரும் 4-ம் தேதி வருகிறது.

மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு அண்ணாமலையின் வரும் பிறந்தநாளை கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாஜக-வின் முன்னாள் கோவை மாநகர் தலைவரான உத்தம பாலாஜி ராமசாமி, தனது ‘உத்தம் பவுண் டேஷன்’ அமைப்பின் சார்பில், கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்திப் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி உள்ளார்.

சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உள்ளிட்ட மாநகரின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

குறிப்பாக அவிநாசி சாலை ஜிடி நாயுடு மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள தூண்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த போஸ்டரில், “எங்கள் தலைவா தலைமை ஏற்க வா….!” என்ற கம்பீரமான வாசகங்கள் அச்சிடப்பட்டு, அண்ணாமலையின் பிரம்மாண்ட படங்களுடன் ஒட்டப்பட்டு உள்ளது.

“தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் முழு வீச்சில் தனது தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்த வேண்டும்” என்ற தொண்டர்களின் நீண்ட நாள் ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த வாசகங்கள் அமைந்துள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டது முதலே கோவை மாவட்ட தொண்டர்களுக்கும் அவருக்குமான பிணைப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வரும் 4-ம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த ‘தலைமை ஏற்க வா’ போஸ்டர்கள், சமூக வலைதளங்களிலும் அண்ணாமலையின் ஆதரவாளர்களால் ‘டிரெண்ட்’ ஆக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் சிலர் கூறும்போது, “சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.

குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் என பலரது வாக்குகளும், தேர்தலில் தவெக வெற்றி பெற கைகொடுத்தது.

தமிழகத் தேர்தலில் பாஜக நிலைமை கவலைக்கிடமானது. அண்ணாமலைக்கு பிறகு பாஜக தமிழ்நாட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதாக பலரும் வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது இளைஞர்களை கருத்தியல் ரீதியாக ஈர்க்க அண்ணாமலை போன்ற தலைவர்களின் தலைமை நிச்சயம் தமிழக பாஜகவுக்கு தேவை.

தமிழ்நாட்டு அரசியலில் இனி அரசியல் கட்சிகள் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கக்கூடும்.

பாஜக இனிவரும் தேர்தல்களில் பெருவாரியான வாக்குகளை பெற நினைத்தால், தமிழக பாஜக தாமதம் இன்றி அதிரடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அண்ணாமலை ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது,” என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *