சென்னை:
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் மனிதவளத் துறை அரசுப் பணியாளர்களுக்கு முக அடையாள பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன.
மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலுவல் பணி நேரமாக உள்ளது. இதற்கிடையே சிற்றுண்டி, உணவு இடைவேளையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் மனிதவளத் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக அடையாள பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.
இதற்கான பயோமெட்ரிக் மற்றும் முகம் காணும் தொடுதிரை இயந்திரம் அலுவலக முகப்பில் நிறுவப்பட்டுள்ளது.
இதையடுத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் தங்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறையை கடைப்பிடிக்க வேண்டுமென கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை வழக்கம்போல் அலுவலகம் வருகை தந்த மனித வளத்துறை பணியாளர்கள் தங்களின் வருகையை புதிய நடைமுறையின்படி பதிவுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமலான போது தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.