சென்னை:
தனியார் கட்டுமான உரிமையாளர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தேமுதிக பொருளாளரும், எம்பியுமான எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி பூர்ணஜோதிக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றியதாகவும், ஒரே குடியிருப்பை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மோசடியாக விற்பனை செய்ததாகவும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மாவை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து அப்போதைய மாநகர காவல் ஆணையரான அருண் உத்தரவிட்டார்.
தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி சந்தோஷ் சர்மாவின் மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர், தனியார் கட்டுமான உரிமையாளரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்த கூடுதல் டிஜிபியான அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பதவி வகிக்கும் அருண் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், “அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி வி்ட்டதாக தனியார் கட்டுமான நிறுவன இயக்குநர்களான சந்தோஷ் சர்மா, அவரது மனைவி கல்பனா சர்மா ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் சர்மாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்தாண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளர் மோசடியில் ஈடுபட்டார் என்றால் அதற்கான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்ற வழக்கை பதிவு செய்யலாம். ஆனால், அதற்காக குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைத்தது அதிகார துஷ்பிரயோகம்.
எனவே சந்தோஷ் சர்மா மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்கிறோம்” என, உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில் சந்தோஷ் சர்மா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.