நியூ சண்டிகர்:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

முதலில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நியூ சண்டிகரிலுள்ள முலான்பூர் மைதானத்தில் நேற்று முன்தினம் இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் குவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 103 ரன்களுடனும், ரிஷப் பந்த் 50 ரன்களுடனும் தொடங்கினர்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷுப்மன் கில் 177 பந்துகளில் 126 ரன்கள் எடுத்த நிலையில் சலீம் சஃபி பந்துவீச்சில் அப்சர் ஜஜாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார்.
மறுமுனையில் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ரிஷப் பந்த் 121 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹிதி பந்துவீச்சில், ஒமர்சாயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த துருவ் ஜூரெல் 19, மானவ் சுதர் 28, முகமது சிராஜ் 22 ரன்கள் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 68 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ஷுப்மன் கில் அறிவித்தார்.
அப்போது வாஷிங்டன் சுந்தர் 52, குல்தீப் யாதவ் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆப்கானிஸ்தான் அணி தொடங்கியது. அப்துல் மாலிக் 16, செடிக்குலா அடல் 17, ரஹ்மானுல்லா குர்பாஸ் 12, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 20, அப்சர் ஜஜாய் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ரஹ்மத் ஷா 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். 451 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி ஃபாலோ-ஆன் நிலைக்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தரப்பில் மானவ் சுதர் 3 விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் ஓவரிலேயே விக்கெட் அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் மானவ் சுதரும் இணைந்தார். ஆட்டத்தின் 6-வது ஓவரை வீச வந்த அறிமுக வீரர் மானவ் சுதர், 4-வது பந்திலேயே அப்துல் மாலிக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.