சென்னை:
அரசுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைவர் விஜய், கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
அதன்பின் அரசுப் பயணமாக கடந்த மே 27-ம் தேதி முதல் முறையாக முதல்வர் விஜய் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்த முதல்வர் விஜய், தமிழகத்துக்குத் வேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாளே சென்னை திரும்பினார்.
இந்நிலையில் 2-வது முறை 3 நாள் அரசுப் பயணமாக முதல்வர் விஜய் நேற்று டெல்லி சென்றார்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று காலை 10 மணிக்குப் புறப்பட்டு டெல்லி சென்றடைந்த முதல்வர் விஜய், முதலில் அங்குள்ள தமிழக அரசின் இல்லத்துக்குச் சென்றார்.
அங்கு அவரை தமிழக அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.