சென்னை:
அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி நேற்று விலகினார். தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
பிரபல நடிகை கவுதமி கடந்த 1997-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து, 25 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டில் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், `‘கட்சியிடம் இருந்தோ, அதன் தலைவர்களிடம் இருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
எனது வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு கட்சித் தலைவர்கள் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர்’’ என்று குற்றம்சாட்டிய கவுதமி, பாஜகவில் இருந்து விலகினார்.
பின்னர், கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் செயல்பாடுகள், கட்சியை அவர் வழிநடத்திச் செல்வது, எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணங்கள் ஆகியவை என்னை கவர்ந்தன.
அதனால் அதிமுகவில் இணைந்தேன்’’ என்று அப்போது கூறியிருந்தார். அதிமுகவில் அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக கவுதமி நேற்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில், அதிமுகவில் நான் வகித்து வரும் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.