ஈக்வேடாரை வீழ்த்தியது ஐவரி கோஸ்ட்!!

பிலடல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை குரூப்-இ ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி கடைசி நிமிட கோலினால் ஈக்வேடாரை 1-0 என்று வீழ்த்தியது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் விங்கர் ஆன அமாத் டியாலோ பெஞ்சிலிருந்து களம் புகுந்து இந்த வெற்றி கோலை 90-வது நிமிடத்தில் அடித்தார். அதுவரையில் கோல் இல்லாத வறட்டு டிராவாகவே இந்த ஆட்டம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது இந்தப் போட்டி.

முதல் பாதியிலேயே ஈக்வேடாருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. முதலில் ஜான் எபோவா தூரத்திலிருந்து அடித்த சக்தி வாய்ந்த ஷாட் கிராஸ் பாரில் மோதி வெளியேறியது.

அதன்பின்னர் ஆலன் மிண்டா, பெட்ரோ விடே வழங்கிய துல்லியமான பாஸை கோலாக மாற்ற முயன்றபோதும் வளைந்து சென்ற அவரது ஷாட் மீண்டும் கிராஸ்பாரைத் தாக்கியது. ஐவரி கோஸ்ட்டும் இதையெல்லாம் கண்டு வாளாவிருக்கவில்லை.

வலதுபுறத்தில் யான் டியோமண்டி தொடர்ந்து கடும் நெருக்கடிகளை ஈக்வேடாருக்கு அளித்தார். மேலும், பஜவ்மனா டூரி அடித்த தாழ்வான ஷாட்டை ஈக்வேடார் கோல்கீப்பர் ஹெர்னன் கேலிண்டேஸ் அற்புதமாக தடுத்து நிறுத்தினார்.

இடைவேளைக்குப் பிறகு ஈக்வேடார் கேப்டன் என்னெர்வாலென்சியா நெருக்கமான கோணத்தில் அடித்த ஷாட் கோல் கம்பத்தில் மோதி வெளியேறியது. மறுமுனையில் ஐவரி கோஸ்ட்டின் எல்யே வாஹி அடித்த முயற்சி கிராஸ்பாரில் பட்டது.

ஐவரி கோஸ்ட் தன்னால் முடிந்த அளவுக்கு ஈக்வேடாரின் தடுப்பு வளையத்துக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்து வந்தது.

90-வது நிமிடத்தில், பெஞ்சிலிருந்து மாற்று வீரராகக் களமிறங்கிய அமாட் டியாலோ தனது தரத்தை நிரூபித்தார்.

வில்ஃபிரெட் சிங்கோவின் பந்துடனான அற்புதமான ஓட்டத்தை அடுத்து செய்த கிராஸ் பெனால்டி பகுதியின் விளிம்பில் வாய்ப்பை ஏற்படுத்த அதை அமைதியாக பயன்படுத்திய டியாலோ, துல்லியமான ஷாட்டை வலையின் கீழ் மூலையில் செலுத்தி கோல் அடித்தார்.

மைதானத்தில் ஐவரி கோஸ்ட் ரசிகர்கள் வெடித்தெழுந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *