துருக்கி அணி முயற்சி செய்த 8 கோல்களை தடுத்த கோல் கீப்பர் பாட்ரிக் பீச் ஆஸ்திரேலிய அணியின் ஹீரோவாக மாறினார்.
உலகக் கோப்பையில் தங்களது முதல் ஆட்டத்திலேயே சிறப்பாக செயல்பட்டு அவர் கோல்களைத் தடுத்த விதம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரரும், அனுபவம் வாய்ந்த கோல் கீப்பருமான மேத்யூ ரியான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டோனி போபோவிக், 22 வயதான கோல்கீப்பர் பாட்ரிக் பீச்சைத் தேர்வு செய்தார்.
8 கோல்களைத் தடுத்த பாட்ரிக் பீச் கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு, பயிற்சியாளரும் எங்கள் கோல்கீப்பர் பயிற்சியாளரும் என்னை அழைத்து, நான் உலகக் கோப்பையில் விளையாடப் போவதாகத் தெரிவித்தனர்.
அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கைதான் இன்று இரவு களத்தில் இறங்கி எனது பணியை சிறப்பாகச் செய்வதற்கான தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிட்னியைச் சேர்ந்த இவர், ஆஸ்திரேலியாவின் ‘ஏ-லீக்’ (A-League) கால்பந்து தொடரில் மெல்பர்ன் சிட்டி அணிக்காக 2 சீசன்களில் மட்டுமே முதன்மை கோல்கீப்பராக விளையாடியுள்ளார்.
இந்த ஆட்டத்தின்போது துருக்கி அணி 30 முறை கோல் அடிக்க முயன்று (அவற்றில் 8 முறை இலக்கை நோக்கி பந்தை சரியாகச் செலுத்தியது) ஆதிக்கம் செலுத்தியபோதும், அனுபவமற்ற கோல்கீப்பராக இருந்தும் பாட்ரிக் பீச் சாமர்த்தியத்துடன் செயல்பட்டு கோல்களைத் தடுத்தது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.