கோவை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி யானை கடந்த சில ஆண்டுகளாகவே வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகில் நடமாடி வருகிறது.
மேலும் அந்த யானை இரவுநேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள வாழை, தென்னை மற்றும் பாக்கு மரங்களை முறித்து தின்று சேதப்படுத்திவிட்டு செல்வதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கல்லார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை நேற்று இரவு மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையை கடந்து அங்குள்ள மாம்பட்டி பகுதிக்கு சென்றது.
பின்னர் அங்குள்ள ஒரு விவசாய தோட்டத்தில் புகுந்து அங்கு வளர்ந்து நின்றிருந்த பாக்கு மரங்களை உடைத்து ருசித்தது. மேலும் தென்னை மரங்களை முட்டி சாய்த்து தென்னங்குருத்துகளை தின்றது.
இதனை அந்த வழியாக சென்ற விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த யானையை விரட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
அப்போது அங்குள்ள ஒருவர் தோட்டத்துக்குள் நின்றிருந்த யானையை வீடியோ எடுத்தார். ஆனாலும் யானை அசராமல் ஒட்டுமொத்த தோட்டத்தையும் சேதப்படுத்திவிட்டு அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து மாம்பட்டி பகுதியில் பாகுபலி யானை அட்டகாசத்தால் சேதம் அடைந்த தோட்டத்தை வனத்துறையினர் நேரடியாக பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய பயிர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.